இந்திய-சீன ராணுவங்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் மான் வேட்டைக்குக் காட்டிற்குள் சென்ற நாச்சோ கிராமத்தின் தாகின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, ஐந்து பேரை சீன ராணுவம் பிடித்துச் சென்றுள்ளதாக அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தபீர் காவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த தபீர் காவ், "அந்த வேட்டைக்குழுவில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர். அவர்களில் ஐந்து பேரை சீன ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது. அவர்களின் உறவினர்களிடம் நான் பேசினேன். வியாழக்கிழமை (செப். 03) நடந்துள்ள இந்தச் சம்பவத்தை அவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்" என்றார்.
அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள நாச்சோ கிராமத்தைச் சேர்ந்த தாகின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், கஸ்தூரி மான்களை வேட்டையாட அங்குள்ள காட்டுப்பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு, வேட்டையாட இந்த ஆறு பேர் கொண்ட குழு காட்டிற்குச் சென்றுள்ளது. அவர்களில் ஐவரை சீன ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவர் சீன ராணுவத்திடமிருந்து தப்பி வந்துவிட்டார்.
சீன-அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள மேக்மோகன் கோட்டில் (எம்.எல்) இருக்கும் ரெசாங்க்லா பாஸ் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க மறுக்கும் சீனா, அது தெற்கு திபத்தின் ஒரு பகுதி என்றே கூறிவருகிறது.
சீனாவின் இந்த அத்துமீறல் குறித்து தபீர் காவ் மேலும் கூறுகையில், "சீன ராணுவம் எந்த அளவுக்கு அருணாச்சல பிரதேசத்திற்குள் ஊடுருவியுள்ளது என்பது கவலையை ஏற்படுத்துகிறது" என்றார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் உள்ள சுபன்சிரி மாவட்டத்தில் இருக்கும் மலைகள் பல அடர்த்தியான காடுகளை உள்ளடக்கியது. இந்தக் காட்டுப்பகுதியில் ரோந்து செல்வது என்பது எந்த ராணுவத்திற்கும் மிகவும் சவாலான விஷயம்.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கேவை நேற்று (செப். 04) சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் 2 மணி நேரம் ஆலோசனை!