கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தவர் ஆசிஃப் அலி சர்தாரி. பாகிஸ்தான் பீபிள்ஸ் பார்ட்டியின் இணைத் தலைவரும், அந்நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோவின் கணவருமான இவர் உயிரிழந்து விட்டதாக, சில நாட்களுக்கு முன் பல்வேறு வீடியோ, குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகின.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அக்கட்சியின் வழக்குரைஞர் ஃபரூக் ஹெச் நேக் ”இந்தத் தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அவருக்கு சில உடல் உபாதைகளும் முதுகு வலியும் இருந்து வருகிறது. ஆனால், கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக சர்தாரி வீட்டில் தான் முடங்கிப் போயுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிக் அலி சர்தாரி அவரது ஆட்சிக் காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தொடர்ந்து சிறையில் அவரது உடல் நிலை மோசமடைந்து வந்ததை ஒட்டி, மருத்துவக் காரணங்களுக்காக, கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆசிஃப் அலி சர்தாரியின் உடல்நிலை பற்றிய வதந்திகள் குறித்து பேசிய அவரது மகன் பிலாவல் பூட்டோ, ”சர்தாரியை குற்றவாளியென அறிவித்து சிறையில் அடைத்தபோது மிகவும் வருந்தினோம். ஆனால் எப்படியோ அவர் கராச்சிக்கு வந்து சேர்ந்ததன் பிறகு, பெரிதும் உடல்நிலை தேறியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'ஓராண்டுக்கு சம்பளத்தில் 30 விழுக்காடு குறைப்பு...' - எடுத்துக்காட்டான குடியரசுத் தலைவர்!