உலகளவில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலும் தென்கொரியா தனது நாட்டின் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சுமார் 4.4 கோடி வாக்களர்களைக் கொண்ட தென் கொரியா முறையான ஏற்பாடுகளுடன் நடத்திய தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை வரவேற்று புத்தமதத் தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தங்களின் வெற்றி மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதியான சூழல் நிலவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பை திறம்பட கையாளும் தங்கள் தலைமையை நான் பெரிதும் வரவேற்று வாழ்த்துகிறேன்.
அமைதியை விரும்பும் புத்த மதத்தை பின் பற்றுவோர் அதிகளவில் தென் கொரியாவில் இருப்பது மகிழ்ச்சிக்குரிய அம்சம். இனிவரும் காலங்களிலும் தங்கள் பணிகள் சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற இடங்களில் அதிபர் மூன் ஜே இன்-க்கு 180 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் ஆளும் கட்சி தேர்தலில் இதுபோன்ற பெருவாரியான வெற்றியைப் பெறுவது முதல்முறையாகும்.
இதையும் படிங்க: 166 ஆண்டுகளில் இல்லாத வழக்கத்தில் பிறந்த நாளை கொண்டாடிய இந்தியன் ரயில்வே