சீன மொழியில் எழுதப்பட்ட வணிக எழுத்தாளர் வு சியாபோவின் வலைப்பதிவை மேற்கோள் காட்டி, பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குவாங்டாங் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணம் என்றும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுகின்றன என்றும் கூறுகிறது.
அதற்கு அடுத்த பாதிக்கப்பட்ட இடங்களாக ஷாண்டோங், ஜியாங்சு, சிச்சுவான் மற்றும் ஜெஜியாங் ஆகியவை உள்ளன. தொற்றுநோய் நுகர்வோர் செயல்பாட்டை நிறுத்தியதால் பல சீன நிறுவனங்கள் பாதிப்பை உணர்கின்றன.
இதற்கிடையில் பிப்ரவரியில் சிங்குவா பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்புக்கு பதிலளித்த தனியார் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 36 விழுக்காட்டினர் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.
அதே மாதத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு கணக்கெடுப்பில், சாண்டோங்கில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவை தற்போதைய நிலைமைகளின் கீழ் அதிகப்பட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முழுமையான வர்த்தகம் மூடப்பட்டதால் 55 விழுக்காடு நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, விருந்தோம்பல் மற்றும் சில்லறைத் துறையில் உள்ள நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
ஏனெனில் மக்கள் சமூகத் தூரத்தை கடைப்பிடிக்கவும் பொது இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். சீனாவில் சில்லறை பொருட்கள் விற்பனை கடைகள் 50 விழுக்காடு விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள பிற துறைகளில் வாடகை சேவைகள், கட்டுமானம் மற்றும் விவசாயம் ஆகியவைகளும் அடங்கும்.
மேலும், வணிக தரவு தளமான தியான்யஞ்சாவின் கூற்றுப்படி, பிப்ரவரி மாதம் முதல் சீனா முழுவதும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுகாதாரம் தொடர்பான சேவைகள், தெர்மோமீட்டர்கள் மற்றும் முகக் கவசம் போன்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்க தங்கள் நோக்கத்தை விரிவுப்படுத்தியுள்ளன.
மேலும் வு சியாபோவின் அறிக்கையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால், கடுமையான நிதி சிக்கலில் உள்ள கணிசமான நிறுவனங்கள் திவால்நிலைக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுமார் 2.47 லட்சம் நிறுவனங்கள் திவாலாகிவிட்டதாக அந்த அறிக்கை கணித்துள்ளது.