கோவிட் 19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, வைரஸ் முதலில் பரவியதாகக் கருதப்படும் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரத்தையே சில வாரங்கள் சீன அரசு முடக்கியது.
இந்நிலையில், சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் செவ்வாய்கிழமை (மார்ச் 15) 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிதாக 13 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "21 பேர் புதிதாக கோவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 11 பேரும் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 922 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,830இல் இருந்து 2,622ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம் சீனாவில் இதுவரை 80,894 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 3,237 பேர் உயிரிழந்துள்ளனர், 68,601 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 8,056 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த வைரஸ் தொற்று இருந்த நபர்களுடன் தொடர்பிலிருந்த 119 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கண்காணிப்பிலிருந்து 1,014 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத்தாலி நாளிதழில் பத்து பக்கத்திற்கு கோவிட்-19 உயிரிழப்பு செய்தி - தொடரும் சோகம்