சீனாவில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல வேகமாகப் பரவிவருகிறது. உலகையே இந்த வைரஸ் அலெர்ட்டில் இருக்க வைத்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் உருவான ஹூபே மாகாணத்தில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 26,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்பட 26 நாடுகளில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ், ஹாங்காங்கில் இந்த வைரஸ் தாக்கி இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பு இந்தக் கொரோனா பாதிப்பை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த வைரஸின் கொடூரத் தாக்குதலால் எந்த ஒரு நாடும் மெத்தனமாக இருந்துவிட முடியாது. வௌவால்கள் அல்லது பாம்புகள் வழியாக மனிதருக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது . சீன அரசு மற்றும் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிப்படையாகவே கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக, அங்குள்ள 13 நகரங்களில் 10,000 படுக்கைகள் வசதியுடன் கூடிய மருத்துவமனைகளைப் போர்க்கால வேகத்தில் சீன அரசு கட்டிவருகிறது. 4 கோடி மக்களின் நடமாட்டத்துடன் இந்த வைரஸ் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்களை சீனாவிலிருந்து, அப்புறப்படுத்த தனி விமானங்களை இயக்கி மீட்டுள்ளன. அதே வேளையில், பாகிஸ்தான் தன் நாட்டுக் குடிமக்களை மீட்காமல் கைவிட்டு விட்டது. சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துதான் இந்த வைரஸை ஒழிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக பொருளாதாரத்தையே பெரிதும் பாதிக்கக்கூடிய இந்த வைரஸின் பிடியிலிருந்து விடுபட உலக நாடுகள் தயாராக இருக்கின்றனவா?
சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு 18 ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டில் பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்பை நினைவுப்படுத்துகிறது. சீன நாட்டின் வர்த்தகப் பலன்களை கருத்தில்கொண்டு, இதுபோன்ற அவசர நிலையை கையாளுவதில் அந்த நாடு ரகசியம் காத்தது. அந்த நாட்டில் நடத்தப்பட்ட பயோ வெப்பன் ஆராய்ச்சியின் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் உலவுகின்றன.
ஆனால், உண்மைத்தன்மை வெளிவருவது கடினமே. கனடா, சிங்கப்பூர், வியட்னாம் போன்ற நாடுகள் சார்ஸ் பாதிப்பைச் சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து தடுத்தன. சீனாவில் சார்ஸ் தாக்கியபோது, 8,000 மக்கள் பாதிக்கப்பட்டு 800 பேர் இறந்தனர். 2009ஆம் ஆண்டு ஸ்வைன்ப்ளு தாக்கியபோது, 2.5 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி 3,000 பேர் வரை உயிரிழந்தனர். 2010ஆம் ஆண்டு மட்டும் எபோலா வைரஸ் தாக்கியதில் 7,000 பேர் உயிரிழந்தனர். இப்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் வேகமாகப் பரவும் தன்மையால் வணிகம் மற்றும் தொழில்களும் மிகவும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
குண்டூர் மிளகாய்ச் சந்தை இந்தியாவிலேயே மிகப் பெரியது. சீன நாட்டுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையால், மிளகாய் வர்த்தகம் சரிந்துள்ளது. சூரத் வைரச் சந்தை பாதிப்பைச் சந்தித்துள்ளது. மற்ற தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டு சீனாவில் சார்ஸ் பாதித்தபோதுதான், உலக வர்த்தக மையத்தில் சீனா புதிய உறுப்பினராகச் சேர்ந்திருந்தது. இப்போதோ, சீனாவுடன் ஒவ்வொரு உலக நாடுகளும் வர்த்தகம் செய்கின்றன. இந்த நாடுகள் எல்லாமே பரவலாக இழப்பை சந்தித்துவருகின்றன. மறு பக்கத்தில் இறப்பு விகிதம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸை கட்டுப்படுத்த சீனா தன்னிடம் உள்ள எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திவருகிறது. ஆனால், வைரஸை கட்டுப்படுத்த இன்னும் சிறிது நாள்கள் ஆகலாம். கொரோனாவல் ஏற்பட்ட இறப்புகளால் ஹாங்காங், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. உள்நாட்டுச் சுற்றுலா எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படுகிறது.
இந்திய அரசு கொரோனா விஷயத்தில் கேரளாவைப் பின்பற்றி நடக்குமாறு பிற மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. தெலங்கானா அரசு கொரோனா பாதிப்புகுள்ளானவர்களை தனியார் மருத்துவமனைகளிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாற்றியுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமான மருத்துவச் சிகிச்சையளிப்பதில் 195 உலக நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 145ஆவது இடத்தில் உள்ளது.
மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துவதோடு மத்திய அரசின் வேலை முடிந்து விட்டதாக கருதக் கூடாது. திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்றவற்றால் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடும் நாடு இது. இத்தகைய நாட்டில் தேவையான நடவடிக்கை எடுப்பதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியமானது. வைரஸ் பாதிப்பு என்கிற சந்தேகம் இருந்தால் அதிக எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். சீனாவில் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ் மத்திய, மாநில அரசுகள் தகுந்த விழிப்புடன் செயல்படாவிட்டால் இந்தியாவிலும் மக்களைக் கொத்துகொத்தாக கொல்ல வாய்ப்புள்ளது.