சீனாவில் கரோனா வைரஸ் கடல் உணவுகள், இறைச்சி, பாம்பு இறைச்சி, பண்ணை விலங்குகள் ஆகியவற்றை விற்கும் சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என பீக்கிங் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த வைரஸிற்கு 2019-nCoV என உலக சுகாதாரத் துறை ஏற்கனவே பெயரிட்டுள்ளதையும் பீங்கிங் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
2019 டிசம்பர் மாதம் முதன்முதலில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை உண்டாக்கியது. வூஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பரவியது.
இந்த 2019-nCoV வைரஸை வெவ்வேறு இடங்களில் பரவிய கரோனா வைரஸோடு ஒப்பிட்டு ஆராய்ந்தபோது CoV என்னும் ஒரே பிரிவைச் சார்ந்த வேறொரு வைரஸாக இருப்பது கண்டறியப்பட்டது. இது வௌவால் அல்லது வேறு ஏதாவது உயிரினத்திலிருந்து பரவியிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் செயல்பாட்டை அறிய அது எந்த விலங்கிலிருந்து உருவானதோ அதன் மூலக்கூறை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இந்தப் புதிய வைரஸானது தன்னை ஏற்றுக்கொள்ளும் செல்களை (Host Cells) அடையாளம் கண்டு அதனுடன் விரைந்து பிணைந்துகொள்கிறது. அவ்வாறு பிணைந்துகொள்ளும்போது இந்த வைரஸானது நோயையும், நோய் தொற்றையும் உருவாக்குகிறது.
இது குறித்து மேலும் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் 2019-nCoV வைரஸ் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இப்போது பரவும் புதிய வைரஸானது 2003ஆம் ஆண்டு 900 பேரை கொன்ற சார்ஸ் நோயுடன் ஒத்ததாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள செவிலிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!