நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் மார்ச்15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து, நியூசிலாந்தின் துப்பாக்கிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.
அதன்படி, தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிக்கு ஜெசிந்தா தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற அல்நூர் மசூதியில்சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் இன்று தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
"தொழுகைக்கு பின் நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்" என்று தாக்குதலில் தனது மூன்று வயது குழந்தை பறிகொடுத்த தந்தை ஒருவர் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இதற்கிடையே, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிறிஸ்ட் சர்ச் நகரில் 3000-க்கும் மேற்பட்டோர் அமைதிப் பேரணி நடத்தினர்.
'மார்ச் ஃபார் லவ்' என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணியில் இனவெறிக்கு எதிராகவும் அமைதியை பேணிகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பதாதைகளைஏந்தியவாறு திரளானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், லிண்வுட் அவென்யூ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட மற்றொரு மசூதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் ஏப்ரல் 5ஆம் தேதி கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.