பெய்ஜிங் (சீனா): கல்வான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் குறித்து கேள்வியெழுப்பிய வலைப்பதிவர் (ப்ளாகர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயது கொண்ட யாங் என்ற வலைப்பதிவரைத் தான் சீன அரசு கைதுசெய்துள்ளது. இதற்கு முன்னதாக 38 வயதான புலனாய்வு பத்திரிகையாளர் கியு ஜிமிங் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர்கள், இந்தியா 20 ராணுவ வீரர்களை இழந்ததாக உடனே அறிவித்த போது சீனாவுக்கு ஏன் உயிரிழந்த வீரர்கள் குறித்து அறிவிக்க 8 மாதங்கள் ஆனது என்று கேள்வி எழுப்பினார். இந்தியா தான் வென்றதாகவே கூறிக்கொள்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து கல்வான் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை இவர் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறியும், தவறான தகவல்களை அளித்ததற்காகவும் கைது செய்யப்பட்டார்.
கல்வான் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். ஆனால் முதலில் சீனா ராணுவத்திற்கு எந்த உயிர்ச் சேதமும் இல்லை என்று கூறப்பட்டது. இச்சூழலில் 2021, பிப்ரவரி 19ஆம் தேதி தங்கள் படையில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.