சீனா கம்யூனிஸ்ட் அரசு உருவான 70வது ஆண்டு நினைவு தினைத்தை முன்னிட்டு நாளை அக்டோபர் 1ஆம் தேதி சீன 'சீன தேசிய தினம்' கொண்டாப்படவுள்ளது.
இதனையொட்டி கடந்த சில நாட்களாகவே அந்நாடு முழுவதும் பிரமிக்கவைக்கும் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், நாளை சீன அரசு சார்பாக தலைநகர் பெய்ஜிங்கில் புகழ்பெற்ற தியான்மென் சதுக்கத்தில் உலகின் மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இதில், சுமார் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் அணிவகுக்கவுள்ளதாகவும், 580 ராணுவ ஆயுதங்கள், 160 போர் விமானங்கள் பேரணியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், முதன்முறையாக சீனாவின் ஐநா அமைதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 ஆயிரம் வீரர்களும் அணிவகுப்பில் பங்கேற்பர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சாங்கான் அரங்கில் (Chang'an Avenue) கம்பீரமாக அமர்ந்துகொண்டு இந்த பிரமாண்ட அணிவகுப்பை மேற்பார்வையிடுவார்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்த அணி வகுப்பானது எங்களது ராணுவ பலத்தைக் காட்டுவதற்காக அல்ல. மாறாக அமைதியை நேசிக்கும், பொறுப்புடைய சீனாவை உலகிற்கு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்" என விளக்கினார்.
இதையும் படிங்க : விஷப் பரீட்சை : சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?
சீன அதிபராக ஜி ஜின்பிங் 2015ல் பொறுப்பேற்றதில் இருந்து அந்நாடு அதன் ராணுவ நிதி ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சீனாவின் ராணுவச் செலவு, ஓராண்டிற்கு 10 சதவீதம் உயர்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, சீனா 168.2 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி) ராணுவத்தில் தற்போது செலவு செய்து வருவது கவனிக்கத்தக்கது.