உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்று முதன்முதலில் சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸ் பரவல் சீனாவுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், தற்போது வெளிநாடுகளிலிருந்து சீனா வரும் பயணிகள் பலர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது கட்டுக்குள் இருக்கும் வைரஸ் மீண்டும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
குறிப்பாக, நேற்று சீனாவில் 30 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 23 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து சீனாவிற்கு வந்த பயணிகளில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,610ஆக உயர்ந்துள்ளது.
எல்லைகள் மூலம் மீண்டும் கோவிட்-19 சீனாவுக்குள் வருவதைத் தடுக்க எல்லை நகரங்களில் மருத்துவ பரிசோதனைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சுமார் 22,000 கிலோ மீட்டர் தூர எல்லையைக் கொண்ட நாடு சீனா. இதன் வழியே சீனாவிற்குள் கரோனா வரும் வாய்ப்பு அதிகம்.
இதைக் கருத்தில் கொண்டு எல்லைப்பகுதிகளிலுள்ள நகரங்களில் வைரஸ் தொற்று குறித்த மருத்துவ பரிசோதனைகளை அதிகரித்துவருவதாகவும் இதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்பது மாகாணங்களுக்குச் சீனா அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், எல்லைப் பகுதிகளுக்கு மருத்துவ கருவிகளையும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்று காரணமாகச் சீனாவில் இதுவரை 82,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,632 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல ஹாங்காங்கில் 1,029 பேருக்கும் (4 உயிரிழப்பு) மக்காவோவில் 45 பேருக்கும் தைவானில் 425 பேருக்கும்(6 உயிரிழப்பு) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!