உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த நவம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கியது. அங்குள்ள வூஹான் நகரில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவியதையடுத்து, அந்த நகரம் சீனாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. சீனாவையே முடக்கிப்போட்ட கரோனாவை, மூன்று மாத பெரும் முயற்சிக்கு பின் அந்நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் வூஹான் பகுதியில் எந்தவொரு நபருக்கும் புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், ஒட்டுமொத்த சீனாவில் உள்நாட்டு மக்களுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் சீன சுகாதாரத்துறை தெரித்துள்ளது.
இந்நிலையில், சீனாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளிடமே தற்போது வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து சீனாவிற்கு வரும் விமானப் பயணிகள் தங்கள் சொந்த செலவில் 14 நாட்கள் கட்டாயத் தனிமை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது.
அதன்படி, நேற்று சீனாவிற்கு வந்த விமான பயணிகள் 39 பயணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 81 ஆயிரத்து 93 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும், 3 ஆயிரத்து 720 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: அமெரிக்க மேலவை உறுப்பினருக்கு கரோனா