ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கியதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று மத்திய அரசு கொடுக்கும் விளக்கங்களை பாகிஸ்தான் ஏற்பதாக இல்லை. இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்றிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுடன் போரில் ஈடுபடுவதால் பிரச்னைகளை தீர்த்துவிட முடியாது என்பதால் சர்வதேச அரங்கில் இப்பிரச்னையை எழுப்பிவருவதாகவும், இந்தியாவுடன் பாகிஸ்தான் முதலில் போரைத் தொடங்காது, ஆனால் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வழக்கமான போர் என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தான் தோற்கும், அணு ஆயுதப்போர் என்றால் இந்திய துணைக் கண்டத்தை தாண்டிச் செல்லும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், போரில் தோல்வியடைந்தால் சரணடைய வேண்டும் அல்லது உயிர்போகும்வரை போராட வேண்டும் என்றும், இதில் இறுதிவரை பாகிஸ்தான் போராடும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.