உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் நாடு சீனா, கடந்த சில ஆண்டுகளாகவே தனது பாதுகாப்புத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், சீனா தனது ராணுவபலத்தின் மூலம் அண்டை நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது.
சீனாவிற்கு கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு நாடு, தைவான். தனி நாடாக தைவான் திகழ்ந்தாலும், அந்நாட்டின் சுயாட்சி என்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டதே என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது.
சீனா தனது தெற்கு கடல் எல்லையில் அதிநவீன ஆயுதங்களைத் தொடர்ந்து குவித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சீனா தனது ராணுவ தளங்களை இரட்டிப்பாக்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தை ஆய்வு செய்தார். அப்போது, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் போருக்குத் தயாராகும்படி வீரர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா தனது ஆதிக்கத்தை தைவான் மீது செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும்; விரைவில் தைவான் மீது போர் தொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், தைவான் மீது ராணுவ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நியூசிலாந்து தேர்தல்: அபார வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டன்