ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவிவருகிறது. இதனால் 30 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் காடுகள் நாசமாகியுள்ளன. அந்நாட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தையே ஸ்தம்பிக்கச் செய்த காட்டுத் தீயால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரதமர் ஸ்காட் மோரிசன், சுற்றுலாவை பாதியிலேயே நிறுத்திவிட்டு நேற்று நாடு திரும்பினார்.
இதையடுத்து இன்று சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நாடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் இச்சூழலில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதற்கு மன்னிப்புக் கோரினார்.
"ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய மக்கள் புரிந்துகொள்வர் என்று நினைக்கிறேன். ஆனால், ஒரு பிரதமர் என்ற முறையில் எனக்கு வேறு சில பொறுப்புகளும் உள்ளன. ஆகையில் என் மீதான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் ஸ்காட் மோரிசன்.
இந்தப் பேரிடரைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுபவன் தான் இல்லை எனச் சொன்ன மோரிசன், இந்த நெருக்கடியான சூழலில் தீயணைப்புத் துறையினரோடு தானும் இருக்க வேண்டும் என்ற மக்களின் உணர்வை மதிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பரவிவரும் காட்டுத்தீக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை மக்களே ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.
இதையும் படிங்க : மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிபராகும் அஷ்ரஃப் கனி!