ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் உண்டான புகை கடந்த செவ்வாய்க்கிழமையன்று முதலில் நியூசிலாந்தின் தெற்குத் தீவுகளை அடைந்ததைத் தொடர்ந்து சுற்றுசூழல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கடும் புகை நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுகளையும் அடைந்து பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் பரவிய இந்த புகையைப் போன்று தான் இதுவரை எதையும் கண்டதில்லை என ஆல்பை கைட்ஸ் க்ளேஸியர்ஸ் சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பைன் கைட்ஸ் கூறியுள்ளார்.
பொதுவாக, டாஸ்மேன், ஃபிரான்ஸ் ஜோசப் மற்றும் ஃபாக்ஸ் பனிப்பாறைகள் வரையிலான விமானங்களில் பயணிப்பதன் மூலம் நியூசிலாந்து நாட்டின் பிரம்மிக்கத்தக்க மலைகள் மற்றும் இயற்கைக்காட்சிகளை, சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து மகிழ்வர். ஆனால் கடந்த சில தினங்களாக, பனிப்பொழியும் அழகிய நியூசிலாந்து நாட்டில், மங்கிய மஞ்சள் நிற வானம் மேலோங்கி அங்கே வருகை தருபவர்களை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.
குறிப்பாக கடந்த புதன்கிழமை காலநிலை மிகவும் மோசமடைந்ததாகவும், காடுகள் எரிந்ததால் ஏற்பட்ட நெடி இன்னும் தனித்து மேலோங்கி உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக இதன் காரணமாக சில விமானங்களும் ரத்தாகியுள்ளன.
சுற்றுலா நகரமான குயின்ஸ்டவுனைச் சுற்றியுள்ள சிகரங்களும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த சில தினங்களாக நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவுகள் பகுதியைச் சேர்ந்த டுனெடின் பகுதியில் காலை நேரங்களில் கருமை அண்டிய வானும், மாலைப்பொழுதுகளில் பழுப்பு நிறமேறியும் காணப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆஸ்திரேலியக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 17 நபர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், மேலும் பலரை மீட்புக் குழுவினர் தேடிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆபத்தை நோக்கி பயணிக்கும் உலகம்' - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள்