ஆப்கானிஸ்தானில் நீண்டகாலம் நடைபெறும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க-தலிபான் பயங்கரவாத அமைப்பு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்கான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்நியப் படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிரான வன்முறையைக்கைவிட ஆப்கானிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டன. இதுதவிர, ஆப்கானிஸ்தான் அரசு-தலிபான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கவும், கைதிகள் பரிமாற்றம் நடக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாகக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு, விடுவிக்க ஒப்புக்கொண்ட ஐந்தாயிரம் தலிபான் சிறை கைதிகளில், வெறும் இரண்டு ஆயிரம் கைதிகளை மட்டுமே விடுவித்துள்ளது.
இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் குறித்து ஆப்கானிஸ்தான்-தலிபான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹெல் ஷாஹீன் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைக்காக ஐந்து பேர் கொண்டு தலிபான் பிரதிநிதிகள் குழு காபூல் சென்றுள்ளது. கைதிகள் பரிமாற்ற விவகாரத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது" என்றார்.
ஆப்கானிஸ்தான்-தலிபான் கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 31ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2,000 தலிபான் கைதிகளை விடுவித்த ஆப்கான் அரசு