தலிபான் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சிராஜுதின் ஹக்கானி-யின் இளைய சகோதரரும், அமைப்பின் மூத்த தளபதியுமான அனாஸ் ஹக்கானி, ஹஜி மாலி கான், ஹஃபிஸ் ரஷித் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைதிகள் பரிமாற்ற முறையில் இவர்கள் மூவரும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கத்தாருக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட இந்த பயங்கரவாதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, ஹக்கானி பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த அமெரிக்கப் பேராசிரியர் கெவின் கிங், ஆஸ்திரேலியா பேராசிரியர் டிமோதி வீக்ஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளோ, அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகமோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, "ஹக்கானிகளின் பிடியில் உள்ள இரண்டு பேராசிரியர்களும் விடுவிக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள இரண்டு தலிபான்கள் விடுவிக்கப்படுவர்" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகள் சர்வதேச சட்டத்துக்குள்பட்டது - அமெரிக்கா