சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் உள்ள மலைப்பகுதியில், 100 கி.மீ., தொலைவுக்கான மாரத்தான் போட்டி நேற்று (மே.22) காலை நடைபெற்றது. இப்போட்டியில் 172 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால், ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து சூறாவளி காற்றும் வீசியது.
கால நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
வீரர்கள் மிகவும் மெலிசான ஆடை அணிந்திருந்தால், குளிரில் சிக்கித் தவித்துள்ளனர். பலர் வழித்தவறி தவறான பாதையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வீரர்களைத் தொடர்பு கொள்ள முடியாததால், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர்.
பலத்த காற்றின் காரணமாக, மீட்புப் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஆனாலும், விடா முயற்சியாக இரவு நேரத்திலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது.
கிடைக்கப்பெற்ற முதல் தகவலின்படி, இந்தப் போட்டியில் பங்கேற்ற 172 பேரில், 151 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 8 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சடலமாக 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்கச் சென்ற வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.