ஆப்கானிஸ்தான், பாக்டிகா மாகாணம் கெய்ர் காட் மாவட்டத்தில் முகம்மது ஹாசன் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள மசூதி அருகே ஞாயிற்றுக்கிழமை (மே-3) இரவு 8 மணியளவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி, அப்பகுதியைச் சேர்ந்த 20 பேர் படுகாயமுற்றதாக காவல் அலுவலர் திங்கள்கிழமை கூறினார்.
புனித ரமலான் தொழுகைக்கு இஸ்லாமியர்கள் கூடிய போது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காயமுற்றவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமுற்றவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானில், இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் மட்டும் 500 பொதுமக்கள் உள்பட 760 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் சில கிளர்ச்சி குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வருகின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகள் உதவி பணிக்குழு நிர்வாகிகள், 'கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு இருக்கும் இந்நேரத்தில் பொதுமக்களை வன்முறையின் வாயிலாக கிளர்ச்சியாளர்கள் மிரட்டக் கூடாது. அமைதி காக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜே.கே. ரவுலிங், கரோனா நிவாரணமாக 10 லட்சம் பவுண்டு நிதியுதவி!