பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள சூஃபி வழிபாட்டுத் தலத்தில் 2017 பிப்ரவரி 16ஆம் நாள் இஸ்லாமிய பிரிவினைவாதிகளால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 82 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்தப் பயங்கரவாதச் செயலில் இஸ்லாமிய பிரிவினைவாதிகளான நாதிர் அலி, ஃபுர்கான் ஆகிய இருவரும் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்களுக்குப் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, "பயங்கரவாதச் செயலில் இருவரும் ஈடுபட்டது சிசிடிவி காட்சி மூலம் உறுதிசெய்யப்பட்டது. குண்டுவெடிப்புக்கு ஒருநாள் முன்பு, சம்பவம் நடைபெற்ற செஹவான் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்ததாகக் குற்றவாளிகள் நீதிபதியிடம் ஒப்புக்கொண்டனர்.
மேலும், குற்றவாளிகளை அடையாளம் கண்ட வழிபாட்டுத் தலத்தின் பராமரிப்பாளர்கள், குற்றவாளிகள் இருவரும் அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒருவருக்கொருவர் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டதாகத் தெரிவித்தனர்" எனக் கூறினர்.
இதையும் படிங்க: 'மலேரியாவுக்கான மருந்தை எடுத்து வருகிறேன்' - ட்ரம்ப்