ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வரும் வேளையில் அதிபர் ட்ரம்ப் தன் பேஸ்புக் பக்கத்தில், "When Looting Starts Shooting Starts" (சூறையாடல் ஆரம்பிக்கும்போது, துப்பாக்கிகளுக்கும் வேலை வந்துவிடும்) என மிரட்டும் தொனியில் கடந்த மாதம் 28ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டு கொதித்த பேஸ்புக் ஊழியர்களே, அதனை டெலிட் செய்ய அனுமதி அளிக்குமாறு நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை கேட்டுள்ளனர். ஆனால், அவர் இதற்கு செவிசாய்க்க மறுத்துள்ளார். இதனால் ஜுக்கர்பெர்க்கின் எதிர்த்து அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பதவியை ராஜினாமா செய்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, நேற்று பேஸ்புக் ஊழியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஜுக்கர்பெர்க் பேசினார். அப்போது ஊழியர்கள், ட்ரம்ப்பின் பதிவு வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது, அதுகுறித்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஊழியர்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர் ட்ரம்ப்பின் பதிவு குறித்து தான் மேலாளர்களுடன் ஆலோசித்ததாகவும், ஆனால் அந்தக் கருத்து பேஸ்புக் நிறுவனக் கொள்கைக்கு எதிராக உள்ளதைத் தங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறினார். ஆகையால் அந்தப் பதிவை நீக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிய ஜுக்கர்பெர்க், பேஸ்புக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆய்வுசெய்து வருவதாகத் தெரிவித்தார்.
ஜுக்கர்பெர்கின் உரையாடல் குறித்து பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பேஸ்புக் நிறுவன ஊழியர்களுடன் மார்க் வெளிப்படையாக ஆலோசனை நடத்தியதாகவும், ஊழியர்களின் கருத்தை அவர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். பேஸ்புக் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, அதன் ஊழியர்களிடமிருந்து இதுவரை இதுபோன்ற எதிர்ப்பலைகள் கிளம்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்