கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது சீனா மட்டுமின்றி இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று, இதுவரை 145 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தப் பெருந்தொற்று குறித்து இப்போது நமக்குத் தெரிந்துள்ள தகவல்கள் முன்பே அறிந்திருந்தால், இதை எளிதில் கட்டுப்படுத்தியிருக்கலாம். சீனாவில் இந்த வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய இடத்திலேயே இதைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
கோவிட் 19 வைரஸ் குறித்த தகவல்களை சீனா மறைக்க முயன்றதாலேயே, இப்போது உலகமே பெரும் அவஸ்தையைச் சந்தித்துவருகிறது" என்றார்.
சீனா ஆரம்பகட்ட தகவல்களை மறைக்க முயன்றதாகவும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற மருத்துவர்களை அந்நாடு தண்டித்ததாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது.
இந்த ட்வீட் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "இது அனைவருக்கும் தெரியும். அது உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். சீனா இப்போது வெளியிடும் தகவல்களாவது உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால், அதையும் யாராலும் உறுதியாகக் கூற முடியாது" என்றார்.
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், "மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்த தகவல்களைத் தெரிவித்திருந்தால், அதை ஒரே இடத்தில் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இது குறித்து தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தால் சீனாவிலேயே இதைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், இப்போது அவர்களால் உலகமே பெரும் அவஸ்தையை சந்தித்துவருகிறது" என்றார்.
இருப்பினும் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: கரோனா - சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இத்தாலி