உலகப் பெருந்தொற்றான கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை கண்டறியப்படாத நிலையில் மலேரியா, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளையே தேவைக்கேற்ப சோதனை முயற்சியாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் குறிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனப்படும் மலேரியாவிற்கான மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்காவின் தேவைக்காக இந்தியா இந்த மருந்தை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்திருந்தது, உலக சுகாதார அமைப்பு. கரோனாவுக்கு எதிராக, இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இந்த மருந்தின் பாதுகாப்புத் தரவு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பலனாக, திட்டமிட்டபடி மருத்துவ பரிசோதனைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு கண்காணிப்புக்குழு, தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றி, அனைத்து உயிரிழப்பு தரவுகளையும் ஆய்வு செய்துள்ளதாக இதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனை நெறிமுறையை மாற்ற எந்தக் காரணங்களும் இல்லை என்று குழுவின் உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்' என்றார்.
இதனிடையே தனக்கு கரோனா வைரஸ் இல்லை என்றாலும், தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தி வருவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். கரோனாவுக்கு எதிராக இந்த மருந்து பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆய்வுகள் எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.