பல ஆண்டுகளுக்கு முன்னரே உலக மக்களை அழிக்கும் பெருந்தோற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறியவர் பில் கேட்ஸ். அதற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்க பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் பல பில்லியின் டாலர்களை பில் கேட்ஸ் அளித்திருந்தார்.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் குறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெகு சில நாடுகளே சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
பல நாடுகள் தங்கள் மக்களுக்கு போதிய சுகாதாரத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டன. கரோனா வைரசைக் கட்டுப்படுத்தியதும் இது குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வகங்களை அமைக்க தற்போது உதவிவருகிறோம். ஏழு வகையான தடுப்பூசிகள் குறித்து தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சிறந்த இரண்டு தடுப்பூசிகள் மாதிரிகளைக் கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
முன்னதாக, உலகளவில் கரோனா வைரசை எதிர்கொள்ள உதவியாக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 100 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
அனைத்து சோதனைகளிலும் வெற்றியடைந்தாலும், இந்தத் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கக் குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: உலக சுகாதார அமைப்பின் கவலைகள்!