ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா-தலிபான் (பயங்கரவாத அமைப்பு) இடையே கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி ஆப்கான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், ஒப்பந்தத்துக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக தலிபான் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தலிபான் வெளியிட்டிருந்த மூன்று பக்க ஆவணத்தில், "மார்ச் 9லிருந்து ஏப்ரல் 10 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தலிபான்களைக் குறிவைத்து ஆப்கானிஸ்தான்-அமெரிக்கப் படைகள் 33 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதுதவிர ராக்கெட், மோர்டார் ஷெல்லிங் மூலம் 9 தாக்குதல்களும், இரவுநேரத்தில் 9 தாக்குதல்களும் அரங்கேற்றியுள்ளனர்.
இதுதொடர்பான 17 சம்பவங்களில் 35 தலிபான் வீரர்களும், 65 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
தலிபான்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஸ்காட் மில்லர், "அனைத்து தரப்பினரும் குறிப்பாக தலிபான்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
அவருடைய செய்தித் தொடர்பாளர் கர்னல் சோனி லெக்கெட் கூறுகையில், "தலிபானுடனான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஒப்பந்தத்தில் கூறப்பட்டது போன்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகள் உதவி வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க : 20 ஆப்கான் அலுவலர்கள் விடுதலை - தலிபான் அறிவிப்பு