வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில், காவல் துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் 25வது சட்டத்திருத்தத்தின் கீழ் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் ட்ரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு துணை அதிபரை மைக் பென்ஸை வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நான்சிக்கு கடிதம் எழுதியுள்ள மைக் பென்சி, 25ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "நமது அரசியலமைப்பின் கீழ், 25 சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதற்காகவோ, அபகரித்தலுக்காகவோ கிடையாது. ஒருவர் அதிபராக தனது பணியை திறமையாக செய்யமுடியாவிட்டால், அந்நபரை பதவியிலிருந்து நீக்க வழிவகை செய்யும் வகையிலேயே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
கரோனா, பொருளாதார நெருக்கடி மற்றும் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நிகழ்ந்த துயர சம்பவங்களுக்கு மத்தியில், அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது. எனவே நடவடிக்கைகள் மூலம் மக்களவை மேலும் பிளவுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
ஆட்சி மாற்றம் முறைப்படி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான தனது பணியை செய்வேன் என உறுதியளிக்கிறேன். டொனால்ட் ட்ரம்பின் பதவிகாலம் முடிய இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயக் கட்சியினர் 25 சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்ப்பை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால், அது நம் நாட்டிற்கோ, நமது அரசியலமைப்பிற்கோ உகந்ததாக இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யவதற்கு மைக் பென்ஸ் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப்புடனான புகைப்படத்தை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்... என்ன காரணம்?