உலக நாடுகளிலுள்ள மத சுதந்திரம் குறித்த ஆண்டுதோறும் அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்காவின் உள் துறை செயலர் மைக் பாம்பியோ புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி வாயிலாக உரையாடிய சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் பிரவுன்பேக், "இந்தியாவில் கடந்த சில காலங்களாக நடக்கும் சம்பவங்கள் குறித்த கவலை எங்களுக்கு உள்ளது.
கடந்த காலங்களில் இந்தியா சகிப்புதன்மை நிறைந்த நாடாகவும், அனைத்து மதங்களையும் மதிக்கும் நாடாகவுமே இருந்துள்ளது. மத ரீதியான நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடாக இருப்பதாலும், சில காலமாக மத வன்முறைகள் அதிகரிப்பதாலும் இந்தியாவின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இப்போது அங்கு நிறைய பிரச்னையை பார்க்கிறோம். மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் உயர்மட்ட ரீதியாக ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும். அதன்பின் ஒரு சில பிரச்னைகளை அடையாளம் கண்டு, அதை சரி செய்ய வேண்டும். இந்தியா உடனடியாக இதை செய்ய வேண்டும், இந்தப் பிரச்னையை தீர்க்க அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்கூட. அவ்வாறு எடுக்கவில்லை என்றால் இந்திய சமூகத்தில் வன்முறை அதிகரிக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதிலும் சிரமம் ஏற்படும்" என்றார்.
கோவிட்-19 பரவலுக்கும் சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சாமுவேல், "சிறுபான்மையினரின் நம்பிக்கையே கரோனா பரவலுக்கு காரணம் என்று குற்றம்சாட்ட முடியாது" என்றார்.
அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கையை இந்தியா கடந்த காலங்களிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. "இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பலதரப்பட்ட சமூகத்தை உள்ளடக்கிய சகிப்புத்தன்மை நிறைந்த ஒரு நாடு. இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. எங்கள் நாட்டு மக்களின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு குறித்து பேச வெளிநாட்டு அமைப்புகளுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்தாண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 7,484 சமூக கலவரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ’பொறுப்புடன் இருங்கள்...வலியை நிறுத்தங்கள்!’ அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சகோதரர்