வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதின் குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. இவருக்கு ரஷ்ய அதிபர் விஷம் கொடுத்ததாக ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் குற்றஞ்சாட்டிவந்தன. இந்நிலையில், விஷம் கலந்த உணவால் பாதிக்கப்பட்டிருந்த நவால்னி ஜெர்மனியில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி ரஷ்யா திரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜெர்மனியில் இருந்து நவால்னி மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அப்போது, ரஷ்ய பெடரல் பெனிடென்ஷியரி சர்வீஸ் இரண்டு நிர்வாகக் குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவரை விதிமீறல் குற்றத்திற்காக கைது செய்ய இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், நவால்னியை விடுவிக்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஒரே நிலையை வழங்குமாறு ரஷ்ய அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
எல்லா இடங்களிலும் உள்ள மக்களை போலவே, ரஷ்ய மக்களும் வெளிப்படையான கருத்துக்கள், அரசுக்கு அஞ்சாமல் கருத்துகளை வெளிப்படுத்துதல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பயன்படுத்துவதற்கான தகுதியுடையவர்கள். அலெக்ஸி நவால்னி மீது எவ்வித சர்ச்சைகளும் இல்லை. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறு நாங்கள் கோருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'எனக்கு விஷம் கொடுக்கப்பட்ட பின்னணியில் அதிபர் புதின் உள்ளார்' - எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு