அமெரிக்க அதிபராகப் பதவியேற்றப்பின், முதல்முறையாக இந்தியாவுக்கு வருகைதரும் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பயணத் திட்டத்தின் விவரம்:
பிப்ரவரி 24 :
அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் புறப்படும் ட்ரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்குவார். அங்கிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக, கடந்து மொடீரா அரங்கத்துக்குச் செல்கின்றனர். இரு நாட்டு தலைவர்கள் செல்லும் வழியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் அளிக்கும் வரவேற்பை அவர் ஏற்கவுள்ளார்.
பின்னர், இரு தலைவர்களும் மொடீரா அரங்கத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதனைத் தொடர்ந்து, சர்தார் படேல் அரங்கம் என்று அறியப்படும் புதுப்பித்து கட்டப்பட்ட மொடீரா விளையாட்டு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பார்.
பின்னர் மொடீரா அரங்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மரியாதை அளிக்கும்விதமாக நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் முதலில் புகழ்பெற்ற சபர்மதி காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட உள்ளனர்.
அங்கு அவர்கள் 30 நிமிடங்கள் செலவிடுவார்கள். அப்போது, அதிபர் ட்ரம்புக்கு ராட்டையும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புத்தகமும் நினைவுப் பரிசாக பிரதமர் மோடி அளிப்பார். காந்தி ஆசிரமத்தைப் பார்வையிட உள்ள முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்பது கவனிக்கத்தக்கது.
ட்ரம்ப்பிற்கு அகமதாபாத்தில், குஜராத்தின் பாரம்பரிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் பிரதமர் மோதியுடன் டெல்லி புறப்பட்டு செல்வார்கள். அங்கு இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அதனையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் ஆக்ராவில் உள்ள உலக காதலில் சின்னமான தாஜ்மஹாலுக்கு செல்கிறார்.
பிப்ரவரி 25:
25 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்றக்கொள்வார். அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் ட்ரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் மோடி, ட்ரம்ப் ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை நடத்துகிறார். அதன்பிறகு, அங்கேயே நடைபெறும் சில தனி நிகழ்வுகளிலும், அவர் பங்கேறவுள்ளார்.
மீண்டும் ராஷ்டிரபதி பவனில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின், இரவு விருந்தில் பங்கேற்று சிறப்பித்துவிட்டு, அதன் பிறகு அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் இருந்து புறப்படுவார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையின்போது, 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 துணை ஆணையர் நிலை காவல்துறை அதிகாரிகள், 200 ஆய்வாளர்கள், 800 துணை ஆய்வாளர்கள், 10,000 காவல்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமான நிலையம், சாலை பயணம், காந்தி ஆசிரமம், மொடீரா அரங்க நிகழ்ச்சி, ஆக்ரா பயணம், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக சந்திப்பு என அனைத்தையும் கண்காணிக்க ஐந்து பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழு சிறப்புப் பிரிவு அலுவலர்கள் இந்த பாதுகாப்பு பணிகளைப் பலப்படுத்துவார்கள்.
இந்த இருநாள் பயணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க அமெரிக்காவின் சீக்ரட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பிரிவினரும் அந்நாட்டு சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிபர் ட்ரம்பின் முதல் பாதுகாப்பு வளையமாக இவர்கள் இருப்பார்கள். ட்ரம்ப்பின் வருகையை முன்னிட்டு குஜராத், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க : தடம்புரண்ட பேருந்து: விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு