உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 3) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள பல கடைகளின் ஜன்னல்களில் பலகைகள் அடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின்போது அசாம்பாவிதம் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கடை வியாபாரிகள் செயல்படுகின்றனர். இதே நிலைமைதான் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிகாகோ உள்பட பல மாகாணங்களில் காணப்பட்டன.
இது குறித்து பேசிய வாஷிங்டனின் துணை மேயர் ஜான் ஃபால்சிச்சியோ, "தேர்தலின்போது தாக்குதல் நடைபெறுவது தொடர்பான எந்தவிதமான எச்சரிக்கையும் வரவில்லை. இருப்பினும், நாங்கள் முழு உஷார் நிலையில்தான் உள்ளோம்.
கடை உரிமையாளர்களில் அச்சத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஏதேனும் இடங்களில், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்துங்கள்" எனத் தெரிவித்தார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்பை கண்டித்து வெள்ளை மாளிகையில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், வேலிகள் தடுப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன. அதில், அதிபருக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்பைவிட ஜோ பிடனுக்கு 10 விழுக்காடு அதிகம் கிடைத்துள்ளதால் அவரே அதிபராக வருவார் என சமூக ஆர்வலர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.