சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் பரவி உலகையே ஆட்கொண்டு வருகிறது. குறிப்பாக, பிற நாடுகளை காட்டிலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது. அங்கு இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, இந்த பேரிடரிலிருந்து உலகை காக்க வேண்டிய பொறுப்பிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவரவிட்டதாகவும், சீனாவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த மே மாதம் 29ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலக உள்ளதாக அறிவித்தார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (ஜூலை 7) ஐநாவுக்கு அனுப்பியது.
அது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டிருந்த அறிக்கையில், "உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவது குறித்து அமெரிக்க அரசு 2020 ஜூலை 6ஆம் தேதி ஐநாவிடம் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி, 2021ஆம் ஜூலை 6ஆம் தேதி உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்" என்றார்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்று புதிய அரசை அமைத்தால் இந்த முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : பிரேசில் அதிபருக்கு கரோனா!