கோவிட்-19 பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திவருகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வளரும் நாடுகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வல்லரசு நாடு என தன்னை பிரகணப்படுத்திக் கொண்ட அமெரிக்காவை ஆட்டிப்படைத்த கோவிட்-19, அந்நாட்டின் மருத்துவ கட்டமைப்பில் உள்ள குளறுபடிகளை உலகறிய செய்தது.
உலகளவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இதன்காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது,
கோவிட்-19 பாதிப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 20.5 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர். உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தும்போது, கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, பொருளாதார பிரச்னைகளை தீர்க்க முதலில் வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், அமெரிக்க பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டில் மோசமான நிலை இனிமேல் தான் வரவுள்ளது. இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மூன்றாம் காலாண்டில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பி.எல்.எஸ் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதிவரை சுமார் 7 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், பொருளாதார நெருக்கடி காரணமாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!