ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால் பிரிட்டன், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் விரைவில் இந்தத் தடுப்பு மருந்து மக்களுக்குச் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தை விரைவில் விநியோகிக்க போட்டியாளர்களாக இருக்கும் யுபிஎஸ் நிறுவனமும் ஃபெடெக்ஸ் நிறுவனமும் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளனர். இருவரும் இணைந்து நாடு முழுவதும் உள்ள 636 இடங்களுக்கு இந்தத் தடுப்பு மருந்தை விநியோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இன்று (டிச. 14) 145 இடங்களுக்கும், நாளை 425 இடங்களுக்கும், புதன்கிழமை (டிச. 16) 66 இடங்களுக்கும் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று இவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. மேலும், கரோனா தடுப்பு மருந்தின் பார்செல்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அவற்றுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
மேலும், தடுப்பு மருந்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு சிறப்பு பெட்டியையும் ஃபைசர் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் சுமார் 975 டோஸ்களை 10 நாள்கள் வரை தேவைப்படும் குளிர்ச்சியான வெப்பநிலையில் வைத்திருக்க முடியும். மேலும், இந்த அனைத்துப் பெட்டிகளிலும் கண்காணிப்பு சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலேசியாவில் 70% மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள்!