அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் பிட்காயின் கும்பலால் ஹேக் செய்யப்பட்டது.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல முக்கிய அறிவிப்புகளை, ட்விட்டரில் தான் உலக தலைவர்கள் பதிவிட்டு வந்த நிலையில், இச்சம்பவத்தால் ட்விட்டரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நாங்கள் வெட்கப்படுகிறோம், ஏமாற்றமடைகிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக மன்னிப்பு கோருகிறோம். உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கக் கடினமாக பணியாற்ற வேண்டும் என்பதை அறிவோம், இச்சம்பவத்தின் குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 130 பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன ”எனப் பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அலுவலர் அலிசன் நிக்சன் கூறுகையில், " ஹேக்கிங் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்கள் 'OG' சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.
OG சமூகம் எந்தவொரு அரசிடனும் இணைந்து பணியாற்றுவதாக அறியப்படவில்லை. இவர்கள், மாறாக ஒரு அடிப்படை திறன் கொண்ட ஒழுங்கற்ற குற்ற சமூகம், தொடர் மோசடி செய்யும் குழுவாக தான் பார்க்கப்படுகிறது.
கணக்கு கையகப்படுத்துதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக மோசடி நடந்திருப்பது தெரியாது, பொதுவாக அதைத் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. சைபர் தாக்குதல் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.