வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாள்களே உள்ளதால், இரு தரப்பினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், நேற்று (அக்.20) பெனிசுல்வேனியாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, அவர் பயன்படுத்திய மைக் திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால், ஆத்திரமடைந்த ட்ரம்ப் அதற்காக ஹிலாரி கிளிண்டனை குற்றம்சாட்டி கிண்டலடித்துள்ளார்.
மைக் வேலை செய்யாததற்கு காரணம் யாரென்று உங்களுக்கு தெரியுமா? ஜோ இதைச் செய்திருப்பார் என நான் நம்பவில்லை. வேறு யாரையாவது நீங்கள் யூகித்தீர்களா? இது அந்த வஞ்சகம் படைத்த ஹிலாரியாகத் தான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன், ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பரப்புரையின் போதும் ட்ரம்ப் இதே வார்த்தையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.