இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருந்த ட்வீட்டில், "அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் அதிமேதாவித்தனமாக நடந்துகொண்டால் (வடகொரிய அதிபர்) கிம் ஜாங் உன் பேரிழப்புக்கு ஆளாவார். சிங்கப்பூரில் அவருடன் வலுவான ஒரு அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டேன். எக்குத்தப்பாக நடந்துகொண்டால் என்னுடனான விஷேஷ உறவை அவர் இழைப்பார்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா மிகமுக்கியமான ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக அந்நாடு கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. "வடகொரியாவின் போர்த்திறனில் திருப்பம் கொண்டுவர இந்த ஏவுகணை சோதனை வழிவகை செய்யும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அணு ஆயுதப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது: வடகொரியா
அமெரிக்காவுடன் இனி அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என வடகொரிய தெரிவித்திருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனையானது அரங்கேறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் வியட்னாம் தலைநகர் ஹனாயில் சந்தித்து பேசினர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இந்த பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிந்தது.
இதையும் படிங்க: கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா ? அதிர்ச்சி தகவல்