அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு நீதி கோரியும், நிறவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பியும், அமெரிக்கா முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் சில நாட்களுக்கு முன்பு வன்முறையாக வெடித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, வெள்ளை மாளிகை (அமெரிக்க அதிபர் அலுவலகம்) எதிரிலுள்ள லாஃபாயேடே பூங்காவில் அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தைக் காவல் துறை கொண்டு வலுக்கட்டாயமாகக் கலைத்த அதிபர் ட்ரம்ப், நேற்று முன்தினம்(ஜூன்.1) புனித ஜான் எபிஸ்கோபல் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டார்.
பின்னர் வெளியே வந்த ட்ரம்ப் அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம், பைபிளை (கிறிஸ்தவப் புனித நூல்) உயர்த்திக்காட்டி போஸ் கொடுத்தார். இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன், அதிபர் ட்ரம்ப் மீண்டும் நேற்று (செவ்வாய்க்கிழமை) புனித ஜான் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டார்.
சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த ஆணையில் கையெழுத்திட்ட பிறகு, இந்த ஆன்மீக பிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், கிறிஸ்தவ மதத்தின் மீது அதீத பற்று கொண்ட பழமைவாதிகளை ஈர்க்கும் ட்ரம்ப்பின் முயற்சியாகவே, இது பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஆன்மீக ஆர்வமில்லாத ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை அவரிடமிருந்து விலக்கலாம், அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலிலும், ட்ரம்ப் மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாகப் பல மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் நிறவெறி படுகொலை: ஆஸியிலும் படர்ந்த போராட்டம்!