74ஆவது ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஏழுநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நியூயார்க்கில் கடந்த வாரம் முதல் 74ஆவது ஐநா பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் மோடியும் மேடையைப் பகிர்ந்துகொண்டார். மிக பிரமாண்டமாக நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சி உலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் இன்று சந்திக்கவுள்ளார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக மோதல், பாதுகாப்பு, ஆற்றல் துறை, பிராந்திய, உலக பிரச்னைகள் உள்ளது பல்வேறு பிரச்னைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இந்தச் சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மேலும், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்பை சந்திப்பது இது நான்காவது முறையாகும்.