உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாகவும், அமெரிக்கா மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்ற விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். மேலும், அமெரிக்காவில் உள்நாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணி செய்பவருக்கு வழங்கப்படும் ஹெச்-1பி, ஹெச்- 4 விசாவை இந்தாண்டு இறுதிவரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை, குறிப்பாக ஹெச்-1 பி விசாவில் உள்ளவர்களை, அரசின் ஒப்பந்தங்களில் பணியமர்த்த கூடாது என்று அதிபர் டரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா வைத்திருக்கும் லட்சக் கணக்கான இந்தியர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "மலிவான வெளிநாட்டு ஊழியர்களுக்காக கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களை புறக்கணிப்பதை பொறுத்துக் கொள்ளாது. ஹெச் -1 பி விசா குறித்த ஒழுங்குமுறைகளை நாங்கள் தற்போது இறுதி செய்கிறோம். இதனால் எந்தவொரு அமெரிக்க ஊழியரும் மீண்டும் பணியிலிருந்து நீக்கப்படமாட்டார்.
ஹெச்-1 பி விசா என்பது அதிக வேலைவாய்புகளை உருவாக்கும் மிகவும் திறமையான நபருக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர, ஊதியம் குறைவாக தொழிலாளரை பணியமர்த்தும் திட்டங்களாக இது இருக்கக்கூடாது" என்றார்.
அமெரிக்காவில் இதுவரை 48,62,513 பேருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,58,968 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியர்களின் வாக்கு ட்ரம்பை வெற்றிபெற வைக்கும் - அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன்!