ஈரான் - அமெரிக்கா விரோதம்
ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து, 2018 மே மாதம், அமெரிக்கா விலகியதிலிருந்து, இருநாட்டிற்கும் இடையேயான விரோதப்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலக அமைதிக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் ஈரான் அணு ஆயுதப் பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டிவரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, ஈரான் நாட்டு ராணுவப் படையின் அங்கமான இஸ்லாமிக் ரெவலியூஷிநரி கார்ட் கார்ப்ஸை (Islamic Revolutionary Guard Corps) வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அதிபர் அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் சென்ட்ரல் கமெண்ட் ( US Central Command) படையை தீவிரவாத அமைப்பு என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், உலக தீவிரவாதத்திற்குத் தலைமையே அமெரிக்காதான் என ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஈரான் விவகாரம், மனித உரிமை மீறல், மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் மொஹமத் பின் சல்மானுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தொலைப்பேசி மூலம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டிவருவதாக விமர்சனங்கள் எழுந்துவரும் வேளையில் டிரம்ப் - மொஹமத் இடையேயான இந்த பேச்சுவாத்தை கவனிக்கத்தக்க ஒன்று.
2018 அக்டோபர் மாதம், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமல் கஷோகி கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இளவரசர் மொஹமதுதான் காரணம் என உலக நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சவுதி அரசு, ஜமால் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கண்டிப்பாகதக்கத் தண்டனை பெற்றுத்தரப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.