சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய, இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை மூன்று ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும், இதில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்தது.
இந்தத் தகவலானது முற்றிலும் பொய் என அமெரிக்க அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளியை வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லை. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்த நபருடனும் அவர் தொடர்புகொள்ளவில்லை. மேலும், வைரஸின் அறிகுறிகளும் அவருக்கு இல்லை. அவர் நலமாகவே உள்ளார். அவரின் உடல்நலத்தை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு!