அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 3) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், "பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்படும் ட்ரம்பின் பரப்புரைக் கூட்டங்களால் இங்கு கரோனா பரவல் அதிகரிக்கின்றன.
தனது பரப்புரை கூட்டங்களால் கரோனா வைரசை மட்டுமின்றி வெறுப்பு, பிரிவு ஆகியவற்றையும் மக்களிடையே அதிகம் பரப்புகிறார். ட்ரம்பின் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசங்களையும் அணிவதில்லை.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அவர் கைவிட்டுவிட்டார். என்னிடம் கரோனாவைக் கட்டுப்படுத்த ஒரு திட்டம் உள்ளது. அதிகளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது, முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்குவது போன்றவற்றின் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், ட்ரம்ப் ஆராய்ச்சியாளர்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்.
மேலும், கரோனா தடுப்பு மருந்தை அவர் அரசியலாக்குகிறார். தடுப்பு மருந்து பயனுள்ளது, பாதுகாப்பானது என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னரே அதற்கு அனுமதியளிக்க வேண்டும்" என்றார்.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் 89.37 லட்சம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2.28 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: எப்போது திரும்பும் இயல்புநிலை? விளக்கும் அமெரிக்க தொற்று நோய் நிபுணர்