வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அவசரநிலை பிரகடனம் செய்து அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பான ட்ரம்ப் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து அமெரிக்க அதிபராக ஜோ பைடன் எந்தவித தடையுமின்றி பதவியேற்க வழிவகை செய்யும் வகையில், அவரது வெற்றியை ஆதரித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இதில் அந்நாட்டு காவல் துறை அலுவலர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இசம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது மீண்டும் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால், தலைநகர் வாஷிங்டன் டிசியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக, அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரும் 20ஆம் தேதி ஜோ பைடன், கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர், துணை அதிபராக பதவியேற்கவுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்ட ஜோ பைடன்!