அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், முன்னாள் துணை அதிபரான பிடனுக்கு ஆதரவு பெருகிவருகிறது. இந்தத் தேர்தலில் இரு தரப்பும் நேரடியான மற்றும் ஆன்லைன் பரப்புரைகளுக்கு அதிக கவனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பரப்புரை இணையதளம் www.donaldjtrump.com ஹேக் செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி வாலட் மூலம் நிதியளுக்கும்படியும் ஹேக்கர்கள் இணையதளம் மூலம் கேட்டுள்ளனர்.
கரோனா பெருந்தொற்று உருவாவதற்கு ட்ரம்ப் அரசே காரணம் எனவும் தேர்தல் முடிவுகளை மாற்ற, ட்ரம்ப் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சதி செய்துவருவதாகவும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைத்தளம் ஹேக் செய்யப்பட்டதை அறிந்த டொனால்ட் ட்ரம்ப் குழு மறுபடியும் வெப்சைட்டை பழைய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது. இது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றி அலுவலர்களுடன் இணைந்து விசாரணை தொடங்கியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பரப்புரைக் குழு தெரிவித்துள்ளது.