அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அவருக்குப் பிறகு அந்த அமைப்பை, அவர் மகன் ஹம்சா பின்லேடன் வழி நடத்துவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
இதனால், ஹம்சா பின்லேடனின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஜூலை 31ஆம் தேதி ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அலுவலர்கள் கடந்த மாதம் தகவல் வெளியிட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.