வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் டிசம்பர் இறுதிக்குள் 20 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இதுவரை 2.1 மில்லியன் பேர் மட்டுமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளை விநியோகிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய சவால். நாட்டை சரியான திசையில் கொண்டுசெல்ல வானத்தையும் பூமியையும் நகர்த்துவேன் என அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் கூறியுள்ளார்.
பிடனின் கருத்திற்குப் பதிலளித்துள்ள ட்ரம்ப், தடுப்பூசிகளுக்கான அனுமதி கிடைத்தவுடன் அவற்றை விநியோகிப்பது மாநிலங்களுக்கு தான். நாங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், இந்தச் செயல்முறையை விரைவாக கொண்டுசெல்ல தேவையான பணம் உள்பட அனைத்திலும் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன் பிடன் தனது அதிபர் பதவியின் முதல் 100 நாள்களில் 100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதாக உறுதியளித்துள்ளார். அந்த இலக்கை அடைய, தற்போதைய வேகத்தை ஐந்து முதல் ஆறு மடங்கு வரை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று நிவாரண மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல்!