அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்தச் சகோதரர் ஃபிரெட் ட்ரம்ப்பின் மகள் மேரி ட்ரம்ப் (55). இவர், அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்து 'டூ மச் அன்ட் நெவர் எனாஃப் : ஹவ் மை ஃபேமிலி கிரியேட்டட் த வேர்ல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரெஸ் மேன்' (Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், மேரியின் சித்தப்பா ராபர்ட் இந்தப் புத்தகத்துக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேரி ட்ரம்ப்போ, அவருக்குத் தொடர்புடைய முகவர்களோ இந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தப் புத்தகத்தின் பதிப்பு நிறுவனமான சைமன் &ஸ்யூஸ்டர் இதனை வெளியிடுவதற்குத் தடை இல்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில், இந்தப் புத்தகம் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக அதிகரித்துள்ளதையடுத்து, இதனை வரும் ஜூலை 14ஆம் தேதியே வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சைமன் & ஸ்யூஸ்டர் அறிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ட்ரம்ப்பின் அதிகார அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில், 'த ரூம் வேர் இட் ஹேப்பன்ட்' (the room where it happened) என்ற புத்தகத்தைக் கடந்த மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகிற்கே சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது - ட்ரம்ப்