அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலைத் தூண்டியதாக அப்போதைய அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், ஜனவரி 20ஆம் தேதி, அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானத்தின் மீதான விசாரணை கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்று வந்தது. அதிலிருந்து, ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரத்தை அபகரிக்கும் வகையில் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டதாக ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாதாடினர்.
ஆனால், பெரும்பாலான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ட்ரம்ப்க்கு ஆதரவாகப் பேசினர். பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் வெற்றிபெறுவதற்கு மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனிடையே, 57-43 என்ற கணக்கில் பதவி நீக்கத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இருப்பினும், பதவி நீக்கத்தீர்மானத்திற்கு ஆதரவாக 7 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அடுத்த தேர்தலில் ட்ரம்ப்பை போட்டியிடவிடாமல் தடுக்கும் நோக்கில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.