அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், "இந்தியாவில் உள்ளவர்களுக்கு என்னைப் பிடிக்கும். இந்த (அமெரிக்காவில்) நாட்டிலுள்ள ஊடகங்களைவிட இந்தியாவில் உள்ளவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் பிரதமர் மோடியையும் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த மனிதர்" என்றார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துக் கவலைப்படுகிறீர்களா என்று அதிபர் ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே மிகப் பெரிய பிரச்னை உள்ளது. இரு நாடுகளும் (தலா) 140 கோடி மக்களைக் கொண்டுள்ளது. பலம் வாய்ந்த ராணுவங்களையும் கொண்டுள்ளது.
இப்பிரச்னையால் இந்தியா மகிழ்ச்சியாக இல்லை; சீனாவும் அநேகமாக மகிழ்ச்சியாக இருக்காது. நான் இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். சீனா தொடர்பான விஷயத்தால் அவர் அதிருப்தியில் உள்ளார்" என தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் இரு நாடுகளுக்குமிடையே சமாதானம் செய்து வைக்க தயாராகவுள்ளதாகப் பதிவிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,"அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நான் அதைச் செய்வேன்" என்றார்.
இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில்,"இந்தப் பிரச்னை குறித்து நாங்கள் சீனாவைத் தொடர்புகொண்டுள்ளோம், சுமூகமான முறையில் இந்தப் பிரசனைய தீர்க்க எண்ணுகிறோம்" என்றார்.
மத்தியஸ்தம் செய்வது குறித்து அமெரிக்க அதிபரின் கருத்துக்குச் சீன அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,"இந்த பிரச்னை இந்தியா, சீனா என்ற இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்னை.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் குலைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா முயலும் என்பதால், இரு நாடுகளும் அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - பேஸ்புக்